கண்ணீர் அஞ்சலி

அமரர் கந்தசாமி சண்முகம்பிள்ளை
மறைவு : 05.12.2020
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க அனுசரணையாளரும், எமது சங்க உறுப்பினராக இருந்த திருமதி உமாதேவியின் அன்புக்கணவரும் ஆன கந்தசாமி சண்முகம்பிள்ளை 05-12-2020 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்வதோடு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஈழத்து சிதம்பர ஈசனை வேண்டுகிறோம்.
துயரில் பங்கெடுக்கும்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் (KWS (UK))
வீட்டு முகவரி: 81B, Carlyon Avenue, HA2 8SN.
தொடர்புகளுக்கு :
07414866585 or 07474177437
மகன் தர்மா : 07414866585
மனைவி உமாதேவி : 07474177437
மூளாய் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவு திருத்த நிதி
எமது சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மேலே குறிப்பிடப்பட்ட நிதி சேகரிப்பு பற்றிய இன்றைய நிலவரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


மேலதிக கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறும்போது, உரிய மாற்றங்கள் இங்கே சேர்க்கப்படும்.
இந்த மகத்தான சேவைக்கு நிதிப்பங்களிப்பு வழங்கி, குறைந்த செலவில் மக்கள் மருத்துவ சேவையினை பெற உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
நிர்வாகம்
பிரித்தானிய நலன்புரிச்சங்கம்
மகப்பேற்று சேவைக்கு தயாராகியது வலந்தலை வைத்தியசாலை
நீண்டகாலமாக திருத்தப்படாமல் பாவனையில் இல்லாமல் இருந்த வலந்தலை வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு பாவனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வலந்தலை வைத்தியசாலை சாதாரண பிரசவங்கள் மேற்கொள்ளத்தக்க நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதுவும் கொரனா (COVID 19) எனும் கொடிய நோய் பரவி, அந்தந்த பிரதேசங்களுக்குள்ளேயே மக்கள் முடக்கப்படும் நிலையில், சாதாரணமான சிக்கல் இல்லாத பிரசவங்களினை காரைநகருக்குள்ளேயே மேற்கொள்ளத்தக்க சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
மகப்பேற்று விடுதியின் தாய்மார்கள் பயன்படுத்தும் குளியலறை, மலசல கூடம் என்பன புனரமைக்கப்பட்டதுடன் விடுதியின் ஓர் பகுதி வர்ணமும் தீட்டப்பட்டும் வைத்தியர் அறை ஒன்றும் புனரமைப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்த வேலைகளுக்காக 300,000 ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாயின் கருப்பையிலுள்ள சிசுவின் இதயத்துடிப்பு வரைபை அறியும் கருவி (CTG) ஒன்றும் எமது சங்கத்தினால் கொள்வனவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கருவியின் பெறுமதி 325,000 ரூபா.
மேற்படி மகப்பேற்று விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்காக எமக்கு கோரிக்கை அனுப்பி எம்முடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் விமலினி (D M O) மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நந்தகுமார் (M H O) ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றியினையும், வாழ்த்துக்குகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் யாழ். போதனா வைத்தியசாலை மகப்பேற்று நிபுணர் வைத்தியர் சரவணபவா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து கர்ப்பவதிகளை பார்வையிட்டு வருகிறார். வைத்தியர் சரவணபவா அவர்களுக்கும், காரைநகர் மக்களின் சார்பில் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
மற்றும் காரைநகர் மைந்தன் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் மற்றுமோர் உன்னதமான பணியில் அடுத்த அங்கமாக பிரதேச வைத்தியசாலைக்கு Ultra Sound Scan ஒன்று 28 லட்சம் ரூபா பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளமையையும் இவ்விடத்தில் நினைவு படுத்துகிறோம். அவ்வியந்திரமும் இந்த மகப்பேற்று விடுதியில் அமையப் பெற்றிருக்கிறது.
பிற திருத்த வேலைகளை மேற்கொண்ட சமூக நலன்விரும்பிகளுக்கும் எமது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
எமது சங்கத்தினால் திருத்த வேலைகள் செய்யப்படமுதல், காரைநகர் வலந்தலை வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவின் நிலவரத்தை கீழ்வரும் புகைப்படங்களில் காணலாம்.
மழைநீர் சேகரிப்பு….
எமது ஊரில் நன்னீர் பிரச்சனை என்பது நெடுநாளைய பிரச்சனை. இதில் முக்கியமாக எமது காரைநகர் மழைநீரை மட்டுமே நம்பியே தமது நன்னீர் தேவையை நிறைவு செய்திருந்தது.
ஆனால் காலப்போக்கில், காரைநகர் மக்களுக்கு நன்னீர் போதுமானதாக இல்லை எனும் நிலை வந்திருக்கிறது. இதற்கு பிரதானமாக எமது காரைநகரில் மழைநீர் உரிய முறையில் சேமிக்கப்படவில்லை.
எனவே காரைநகர் மக்கள் மழைநீரை சேகரிக்கத்தக்க பல்வேறு வழிமுறைகளை கண்டறிந்து, இயலுமானவரை மழைநீரை சேமிக்க முயலவேண்டும்.
மழைநீரை பல்வேறு வழிமுறைகளில் நாம் சேமிக்கலாம். யார் மழைநீரை சேமிக்க முயல்கிறார் என்பதை பொறுத்து அது வேறுபடலாம்.
தனிப்பட்டோரினால் மேற்கொள்ளத்தக்க மழைநீர் சேகரிப்பு முறைகள்
- கூரையில் விழும் மழைநீரை குழாய்மூலம் சேகரித்து நிலத்தின் கீழ் செலுத்துவது.
பின்வரும் புகைப்படம் அதை விளங்கப்படுத்தலாம்.

- இந்த திட்டம் இலகுவானதாக தெரிந்தாலும் பல்வேறு குறைபாடுகளை கொண்ட முறைமையாகும். குறிப்பாக காரைநகர் போன்ற அடிக்கடி மழைவீழ்ச்சியை சந்திக்காத கிராமங்களுக்கு இது பெரிதும் பயன்கொடுக்குமா என்பது கேள்விக்குறியே.
- கொழும்பு, சென்னை, டெல்லி, லண்டன் போன்ற மிக நெருக்கமாக மக்கள் வாழும் பகுதிகளுக்கே இது செலவழிக்கும் பணத்திற்கு ஏற்ற பயனை தரும் என கூறலாம். ஏனெனில் மிக நெருக்கமான அமைக்கப்பட்ட வீடுகள், மழையாக பொழியும் பெரும்பாலான மழைநீரை ஏந்தி குழாய்வழியே கிடங்கினுள் இறக்கி சேமிக்க உதவியாக இருக்கும்.
- கூடியளவு செலவு. நகரத்திற்கு ஏற்ற வழிமுறை எனும்போதே இது கிராமத்திற்கு அவ்வளவு தூரம் உதவியை வழங்கிட போவதில்லை என புரிந்து விடுகிறது. கிராமத்தில் உள்ள பணம் படைத்தவர்களும், வெளிநாட்டு உதவி கிடைப்பவர்களுமே இந்த முறையில் நீரை சேர்க்க முடியும். (ஒரு சில வெளிநாடு வாழ் தனிப்பட்டவர்கள், இதற்கான நிதியை சேர்த்து வழங்க இருப்பதாக தகவல்கள் உண்டு).
- காரைநகரில் உள்ள எல்லா வீடுகளும், இந்த திட்டத்திற்கு ஒத்துவரத்தக்க வசதியான கூரையை உடையவையா என்பது பெரிய கேள்வி.
- செய்யும் செலவுக்கு ஏற்ற அளவில் பலன் கிடைப்பதில்லை, இந்த திட்டத்தால் கிராமங்களில். கிராமங்களில் பெரிய பரப்புகளில் வளவுகளும், சிறிய அளவிலான பரப்பை உடைய ஓடுகளுமே உள்ளது. இந்த நிலையில் இந்த முறையில் மழைநீரை சேமிக்க முற்படும் நீரைவிட, இந்த முறையில் சேமிக்க முடியாத அளவில் உள்ள மழைநீரே பெருமளவில் உள்ளது.
- மேற்கூறிய குறைபாடுகளால் இந்த முறையில் மழைநீரை சேர்ப்பது பணம் படைத்தவர்களுக்கே சாத்தியப்படுவதால், ஒட்டு மொத்த கிராமத்திற்கும் உகந்ததாக ஆவண செய்ய முடியாமல் உள்ளது.
- வீட்டு வளவினுள் விழும் மழைநீரை வளவினுள் உள்ளேயே ஒரு குழியை உருவாக்கி, மழைநீரை சேகரிக்கலாம்.
மேற்கூறிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, மழைநீரை ஏந்தி சேமிக்க தயாராகவுள்ள பரப்பளவை கூட்டி, தனிப்பட்டவர்கள் தங்கள் வளவினுள் மழைநீரை சேமிக்கும் இந்த திட்டம் ஆவண செய்யலாம்.
வளவின் சுற்று எல்லைகளை உயர்த்தி, வளவின் உள்ளே மழையாக பெய்யும் மழைநீரை சேமிக்கும் முறையாக இந்த முறை கூறப்படுகிறது.
வளவின் பள்ளமான பகுதியில் ஒரு குழியை ஏற்படுத்தி விட்டால், அது மழைநீரை மிகவேகமாக நிலத்தின் உள்ளே கொண்டுசெல்ல வழிசமைக்கும்.
அந்த குழிகளுக்கு உரிய மூடிகள் அமைக்கப்படவேண்டும். ஏனெனில் அது தேவையற்ற விபத்துகளை தவிர்க்க உதவும். மற்றும் நுளம்பு பெருக்கத்தில் இருந்தும் பாதுகாப்பை வழங்கும்.


வீட்டு வளவு எல்லையின் உள்ளே பள்ளமான பகுதியில் ஒரு குழியை உருவாக்கி, மேற்கூறிய முறையில் குழிக்கு மூடியை உருவாக்கி பெரிதாக குப்பைகள் சேராத மழைநீரை நிலத்தடியில் சேமிக்கலாம்.
- நிலத்தின் கீழே செலுத்தும் மழைநீரில் கலந்துள்ள குப்பைகள் அகற்றப்படவேண்டும்.
மேற்கூறிய திட்டங்கள் தனிப்பட்டவர்கள், தங்கள் வீடுகளில் செய்யக்கூடிய முறைகள் ஆகும். தனிப்பட்டவர்கள் என்பது தாண்டி, பாடசாலைகள், நிறுவனங்கள் தங்களுக்குரிய வளவுகளில்/காணிகளில் இப்படியான செயல்பாடுகளை செய்ய முன்வரலாம். அப்படியானவர்கள் இந்த திட்டங்களுக்கு ஏற்படும் செலவையும், அதனால் வரத்தக்க பலனையும் கருத்தில்கொண்டு முடிவு செய்ய வேண்டும்.
நிறுவனங்களால் மேற்கொள்ளத்தக்க மழைநீர் சேகரிப்பு முறைகள் : பெரிய அளவில், எல்லோருக்கும் பொதுவாக
- இதுவரை நாம் தனிப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் பயன் அளிக்க தக்கதான முறைகளை பார்த்தோம்.
- பல குடிகளுக்கு பயன்தரக்கூடிய திட்டங்களையும் நாம் ஆராயவேண்டும்.
- எம்போன்ற அமைப்புகள் பொது பயன்பாட்டிற்கு உதவத்தக்க திட்டங்களையே இனம்கண்டு, நடைமுறைப்படுத்தலாம்.
- எமது சங்கம் இப்படியான திட்டங்களை காலம் காலமாக செய்து வருகிறது.
- – பொது கிணறுகளை அமைத்தல், புனரமைத்தல்
- – கோவில் கேணிகளை புனரமைத்தல்
- – பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு குளங்களை புனரமைத்தல்
- – அணைகளையும், குளங்களையும் அமைத்தல்
- அணைகளை உருவாக்கி அதன்மூலம் மழைநீரை சேகரித்து வைத்தல்
எமது சங்கம் பல அணைகளை காரைநகரில் கட்டி மழைநீர் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.


மழைநீரை சேமிக்கவென அமைக்கப்படும் அணைகளும், குளங்களும் காரைநகரின் நில அமைப்பையும், கடல் மட்டத்தில் இருந்து எவ்வளவு உயரம் என்பதையும் மேலும் மழைநீர் வழிந்தோடும் கால்வாய்கள் மற்றும் மழைநீர் தடங்களை அடிப்படையாக கொண்டே அமைக்கப்படவேண்டும்.
காரைநகரின் கடல் மட்டத்தில் இருந்துள்ள உயரத்தை பின்வரும் வரைபடத்தில் இருந்து அடையாளம் காணலாம்.
https://en-in.topographic-map.com/maps/2szp/Karainagar/
காரைநகரின் மழைநீர் வடிகால் அமைப்பு பற்றிய தரவு சேகரிக்கப்படுகிறது. அவை கிடைத்தவுடன் இங்கே பிரசுரிக்கப்படும்.
- தெருவில் வழிந்தோடும் மழைநீரை சேகரித்தல்
காரைநகருக்கு நாம் செல்லும்போது, மழை பெய்துகொண்டிருந்தால், பெருமளவு மழைநீர் வீதி வழியே ஓடிக்கொண்டு இருப்பதை அவதானித்து இருப்பீர்கள். அந்த மழைநீர் தெருவழியே ஓடி,
- அங்கங்கே தேங்கி தெருக்களை பழுதாக்குகிறது
- அங்கங்கே தேங்கி நுளம்பு பெருக்கத்திற்கு உதவுகிறது (நம்மூரில் கொசுதொல்லை பெரும்தொல்லை என்பது யாவரும் அறிந்ததே)
- சிதறி சிதறி நின்று ஆவியாகிறது
- அணைகளுக்கும், குளங்களுக்கும் முழுமையாக சென்றடையாமல் வீணாகிறது
- திடீரென வெள்ளம் சேர்ந்து அணைகளுக்கும் தேவையற்ற பல்வேறு அழுத்தத்தை கொடுக்கலாம்.
- இதனால் பெருமளவு மழைநீர், எமக்கு பயன்கொடுத்திருக்கக்கூடியது, ஆனால் கடலில் சென்று கலந்து விடுகிறது.
என பல காரணிகளை கருத்தில் கொண்டு, தெருவில் ஓடும் மழைநீரை ஆங்காங்கே சேமிக்க முயலலாம் என ஆராயப்படுகிறது. அதற்காக “தெருவோர மழைநீர் சேகரிப்பு ” (Roadside Rainwater Harvesting) எனும் முறையை காரைநகருக்கு கொண்டுவரலாம் என எண்ணுகிறோம்.
இது மேலைநாடுகளிலும், சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளிலும் மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளில் மேற்கொள்ளத்தக்க வழிமுறையாகவும் இந்த தெருவில் ஓடும் மழைநீரை சேகரிக்கும் முறை உள்ளது.
எமது காரைநகரிலும் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளில் மக்கள் நெருக்கமாக வாழத்தொடங்கி விட்டார்கள். எனவே அணைகளையோ, கேணிகளையோ அவ்விடங்களில் அமைத்தல் சாத்தியமான ஒன்றாக புலப்படவில்லை.
எனவே தெருவில் வழிந்தோடி கடலை நோக்கி ஓடும் மழைநீரை ஆங்காங்கே நிலத்தினுள் இறக்கிவிடத்தக்க வகையில் கட்டமைப்புகள் உருவாக்கப்படவேண்டும்.





தெருவில் ஓடும் மழைநீரை சேகரிக்கும் புள்ளிகளை உருவாக்கி பெறப்படும் மழைநீரை, பிறிதொரு இடத்தில் அமைக்கப்படும் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் நீரை சேகரிக்கலாம்.
பல்வேறு மழைநீர் சேகரிக்கும் புள்ளிகளுக்கு ஒரு பாரிய பொது தொட்டியை அமைத்தும் சேகரிக்கலாம்.


- மழைநீரை சேகரிக்கும்போது, இயலுமானவரை வடிகட்ட வேண்டும். பிரதானமாக தேவையற்ற குப்பைகள் நீர் சேகரிக்கும் செல்வது திட்டத்தையே பாழாக்கிவிடும். அல்லது பராமரிப்பு செலவு கூடும். நிலத்தடி நீரையும் மாசுபடுத்தலாம்.
- மழைநீரை நிலத்தடிக்கு இறக்கும்போது கடல்நீர் மட்டம் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
- பல்வேறு இடங்களில் மழைநீரை நிலத்தின் கீழ் செலுத்துவதே எமது ஊர் போன்ற இடங்களுக்கு பயன் தரக்கூடியது.
எமது இந்த மழைநீர் சேகரிப்பு பற்றிய அலசல் இன்னும் விரிவாக்கப்பட இருக்கிறது. தங்களிடம் இது பற்றி ஏதும் மேலதிக கருத்துக்குள் இருந்தால் எமக்கு info@karainagar.org எனும் முகவரிக்கு தெரிவிக்கலாம்.
நன்றி
Water flows down city streets and into the stormwater management system. As it flows over the road, it picks up contaminants such as car fluids, salts from winter, and chemicals used on lawns. Credit: S. Fisk
காரைநகரின் மருமகனுக்கு வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று தெரிவு செய்யப்பட்டமை காரைநகர் மக்களாகிய எமக்கு பெருமையையும், மகிழ்வையும் அளிக்கிறது.
துணைவேந்தர் சிறிசற்குணராஜா எமது ஊரைச் சேர்ந்த சிவராணி அவர்களின் அன்புக்கணவரும், எம்கிராம தமிழருவி சிவகுமார் அவர்களின் மைத்துனரும் ஆவார்.

துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராசா, யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து சிறந்த சேவையை வழங்கவேண்டும் என காரைநகர் மக்கள் வாழ்த்துவதோடு, அதற்கு எல்லாம் வல்ல திண்ணைபுரவாழ் ஈசனின் ஆசியை வேண்டி நிற்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலி: அமரர் சிவபாக்கியம் நடராஜா

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் சுப்பிரமணியம் வீதி,
கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்,
லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட
சிவபாக்கியம் நடராஜா அவர்கள் 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று
அதிகாலை லண்டனில் காலமானார்.
அன்னார் எமது சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும், பலவருடம் எமது சங்கத்தின் நிர்வாக உறுப்பினருமாக இருந்த திரு நடராசா ராஜ்குமார் அவர்களின் அன்புத்தாயார் ஆவார்.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா இறைவனடிசேர எல்லாம் வல்ல திண்ணபுர வாழ் ஈசனை பிராத்திக்கிறோம்.
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்
பிரித்தானியா
மேலதிக விபரங்களுக்கு ….
https://www.ripbook.com/42693227/notice/110752?ref=ls_d_obituary
அன்பின் காரைநகர் மக்களே,
எமது ஊர் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் பல்வேறு தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எமது சங்கம், காரை அபிவிருத்தி சபையின் பெயரில் நிரந்தர வைப்பாக 10 இலட்சம் ரூபாவை இட்டு, அதிலிருந்து வரும் வட்டி வருமான நிதியில், பிரதேச வைத்தியசாலையில் பராமரிப்பு பணிக்கு உதவி வருகிறது.
திருத்த வேலைகள் காரை அபிவிருத்தி சபையினால், வைத்தியசாலை நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செய்யப்பட்டு வருகின்றது.
அதற்கமைய அண்மையில், வைத்தியசாலையின் மலசல கூடங்கள் திருத்தி அமைக்கப்பட்டது.
மகப்பேற்று பிரிவில் அபிவிருத்திகள்.…
பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு உள்ளாக்கப்படுகிறது.
இதற்காக பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் விமலினி (D M O) மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நந்தகுமார் (M H O) ஆகியோர் அதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.
அவர்களுக்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் உறுதுணையாக வேலை செய்கின்றது.
மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவ பிரதி புதன்கிழமை தோறும் காரைநகர் வைத்தியசாலையில் கர்ப்பவதிகளை இலவசமாக பார்வையிட்டு வருகிறார்.
அவருக்கு தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
மகப்பேற்று வைத்திய நிபுணருக்கான பகுதியில், எமது சங்க அனுசரணையில் திருத்த வேலைகள் நடைபெறுகின்றது.
மேலும் கர்ப்பிணிகளை பார்வையிட தேவையான CTG Machine ஒன்று எமது சங்கத்தினால் வாங்கி பிரதேச வைத்தியசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்குள் அவ்வியந்திரம், பிரதேச வைத்தியசாலையை வந்தடைந்து விடும்.
மேலுமொரு உபகரணம் பிரதேச வைத்தியசாலைக்கு வந்துள்ளது. திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் மற்றுமோர் உன்னதமான பணியில் அடுத்த அங்கமாக பிரதேச வைத்தியசாலைக்கு Ultra Sound Scan ஒன்று 28 லட்சம் ரூபா பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளது.

திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் இச்சேவையில் திண்ணைபுர ஈசனின் அருள்கூட மனமார வாழ்த்துவதோடு, மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.
திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் சேவை மூலம் எமது காரைநகர் மண் மேலும் மேன்மை அடையும் என திடமாக நம்புகிறோம்.
இவ்வாறான மகப்பேற்று பிரிவில் ஏற்படும் அபிவிருத்தி எமது காரைநகரின் சீரான பிறப்பு வீதத்திற்கு உதவும் என எதிர்பார்க்கிறோம்.
மேலும் எமது பிரதேச வைத்தியசாலையில் ஏற்படும் அபிவிருத்தி எமது ஊருக்கு மட்டுமில்லாமல், சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
பிற திட்டங்கள் ….
வேறு பல அபிவிருத்தி திட்டங்களும் காரைநகர் வைத்தியசாலைக்கு வர இருக்கிறது.
கண் பரிசோதனைக்கு உரிய Slit Lamp வாங்கி கொடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
காரைநகர் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்க செய்யும் நோக்கில், கர்பிணிப் பெண்களின் போசாக்கை உறுதி செய்யும் திட்டமும் ஆராயப்பட்டு வருகிறது.
மூளாய் வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவு திருத்தம்
அன்பான காரை மக்களே,
பெரும்பாலான காரைநகர் மக்கள் பிறந்த மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பல்வேறு திருத்த வேலைகளை செய்து முன்னேற்ற வேண்டிய நிலையில் உள்ளது. பல்வேறு தரப்பினர்கள் பல பல வேலைத்திட்டங்களை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில், எமது சங்கத்திடம் அவசர பிரிவினை திருத்தி தருமாறு, மூளாய் வைத்தியசாலை நிர்வாகம் கோரிக்கை வைத்தது. அதற்கமைய, எமது சங்கமும் நிதியை திரட்டி மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையை முன்னேற்ற முன்வந்துள்ளது.

அவசர பிரிவிற்கான உபகரணங்களை வாங்க இலங்கை பெறுமதியில் 35 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. அதற்கான நிதியை தங்களின் நன்கொடைகளாக வேண்டி தங்களை நாடி வந்துள்ளோம்.
தங்களின் நன்கொடைகளை வழங்கி, அப்பகுதி மக்களின் வைத்திய சேவையை மேம்படுத்த உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தாங்கள் மற்றும் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பிறந்த வைத்தியசாலையை சிறந்த தரமுடையதாக மாற்றி அமைக்கும் வாய்ப்பு வந்துள்ளது. அதில் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு வேண்டி நிற்கின்றோம்.
உங்கள் பங்களிப்பை கீழ்காணும் இணைப்பில் சென்று செலுத்தலாம்.
https://www.gofundme.com/f/acci-and-emer-services-at-moolai-hospital
நன்றி
காரை நலன்புரிசங்கம், பிரித்தானியா
மூளாய் வைத்தியசாலையின் அமைவிடம், google வரைபடத்தில்
மூளாய் வைத்தியசாலை பற்றிய ஒரு அறிமுகம்….
https://www.who.int/workforcealliance/members_partners/member_list/moolai/en/
About Moolai Hospital, by WHO
Recent Comments