அன்பின் காரைநகர் மக்களே,

எமது ஊர் பிரதேச வைத்தியசாலையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் பல்வேறு தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


எமது சங்கம், காரை அபிவிருத்தி சபையின் பெயரில் நிரந்தர வைப்பாக 10 இலட்சம் ரூபாவை இட்டு, அதிலிருந்து வரும் வட்டி வருமான நிதியில், பிரதேச வைத்தியசாலையில் பராமரிப்பு பணிக்கு உதவி வருகிறது.


திருத்த வேலைகள் காரை அபிவிருத்தி சபையினால், வைத்தியசாலை நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செய்யப்பட்டு வருகின்றது.


அதற்கமைய அண்மையில், வைத்தியசாலையின் மலசல கூடங்கள் திருத்தி அமைக்கப்பட்டது.


மகப்பேற்று பிரிவில் அபிவிருத்திகள்.


பிரதேச வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவு பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு உள்ளாக்கப்படுகிறது.


இதற்காக பிரதேச வைத்திய அதிகாரி வைத்தியர் விமலினி (D M O) மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நந்தகுமார் (M H O) ஆகியோர் அதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

அவர்களுக்கு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் உறுதுணையாக வேலை செய்கின்றது.


மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணபவ பிரதி புதன்கிழமை தோறும் காரைநகர் வைத்தியசாலையில் கர்ப்பவதிகளை இலவசமாக பார்வையிட்டு வருகிறார்.

அவருக்கு தேவையான ஒழுங்குகள் செய்யப்பட்டு வருகின்றன.


மகப்பேற்று வைத்திய நிபுணருக்கான பகுதியில், எமது சங்க அனுசரணையில் திருத்த வேலைகள் நடைபெறுகின்றது.


மேலும் கர்ப்பிணிகளை பார்வையிட தேவையான CTG Machine ஒன்று எமது சங்கத்தினால் வாங்கி பிரதேச வைத்தியசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்குள் அவ்வியந்திரம், பிரதேச வைத்தியசாலையை வந்தடைந்து விடும்.


மேலுமொரு உபகரணம் பிரதேச வைத்தியசாலைக்கு வந்துள்ளது. திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் மற்றுமோர் உன்னதமான பணியில் அடுத்த அங்கமாக பிரதேச வைத்தியசாலைக்கு Ultra Sound Scan ஒன்று 28 லட்சம் ரூபா பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளது.

பிராந்திய சேவைகள் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, மகப்பேற்று வைத்தியர் சரவணபவ  மற்றும் வைத்தியர் விமலினி.

திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் இச்சேவையில் திண்ணைபுர ஈசனின் அருள்கூட மனமார வாழ்த்துவதோடு, மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறோம்.

திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதனின் சேவை மூலம் எமது காரைநகர் மண் மேலும் மேன்மை அடையும் என திடமாக நம்புகிறோம்.


இவ்வாறான மகப்பேற்று பிரிவில் ஏற்படும் அபிவிருத்தி எமது காரைநகரின் சீரான பிறப்பு வீதத்திற்கு உதவும் என எதிர்பார்க்கிறோம்.


மேலும் எமது பிரதேச வைத்தியசாலையில் ஏற்படும் அபிவிருத்தி எமது ஊருக்கு மட்டுமில்லாமல், சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.


பிற திட்டங்கள் ….

வேறு பல அபிவிருத்தி திட்டங்களும் காரைநகர் வைத்தியசாலைக்கு வர இருக்கிறது.


கண் பரிசோதனைக்கு உரிய Slit Lamp வாங்கி கொடுக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


காரைநகர் மக்களின் பிறப்பு வீதத்தை அதிகரிக்க செய்யும் நோக்கில், கர்பிணிப் பெண்களின் போசாக்கை உறுதி செய்யும் திட்டமும் ஆராயப்பட்டு வருகிறது.