காரைநகர் மக்களுக்கு சேவையாற்றும் எமது பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம், கீழ்வரும் செயல்திட்டங்களை துரிதகதியில் காரைநகரில் செய்ய முடிவு செய்துள்ளது.

செயல்திட்டம் 1 : காரைநகர் வைத்தியசாலையில் அவசர திருத்தவேலைகள்

காரைநகர் வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஆண்கள் விடுதி மற்றும் அதை அண்டிய வைத்தியசாலைப்பகுதிகளில் திருத்த வேலைகளும், வர்ணப்பூச்சும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

செயல்திட்டம் 2 : விளையாட்டு கழகங்களுக்கான நிதியுதவி 

கடந்த வருடம் எமது சங்கத்தை கீழ்வரும் விளையாட்டுக்கழகங்கள் அணுகி நிதியுதவி கோரியிருந்தன. அன்றைய சூழ்நிலை காரணமாக, எம்மால் அந்த நேரத்தில் உதவி செய்திட முடியவில்லை. அதை கருத்தில்கொண்டு, மூன்று சங்கங்களுக்கும், தலா ரூபா 500,000 நன்கொடை வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  • களபூமி விளையாட்டுக்கழகம்
  • காரை சலஞ்சர்ஸ் விளையாட்டுக்கழகம்
  • கோவளம் விளையாட்டுக்கழகம்

செயல்திட்டம் 3 : 10 வயதிற்குட்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாடு

காரைநகர் பிரதேச செயலாளரின் வழிகாட்டலுக்கு அமைய, 10 வயதிற்கு உட்பட்ட மாணவர்களின் கல்வி செயற்பாட்டை ஊக்குவிப்பதற்கு தேவையான, எம்மால் முடிந்தளவான செயற்பாடுகளில் இறங்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதற்காக கீழ்வரும் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு, அப்பாடசாலைகளின் அதிபர் முதலான கல்வி சமூகத்துடன் ஆலோசனைகள் செய்து, வழிமுறைகள் இனம்காணப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கிறது.

  • வியாவில் சைவ வித்தியாலயம்
  • யாழ்றன் கல்லூரி
  • காரைநகர் இந்துக்கல்லூரி
  • சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்

செயல்திட்டம் 4 : சங்க யாப்பு சீர்திருத்தம் 

இதற்கான ஆலோசனைகள் பிரித்தானியா வாழ் காரைநகர் மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. எமது காரை சங்கமம் 2022 இல், ஆலோசணை பெட்டி வைக்கப்பட்டிருக்கும். எமது விளையாட்டு நிகழ்விற்கு வருவோர், தங்கள் பரிந்துரைகளை அன்றைய தினம், எழுதி குறிப்பிட்ட பெட்டியில் போடலாம்.

செயல்திட்டம் 5 : மாதிரி பொருளாதார மையம் 

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தீர்க்க வழிகாட்டும் முகமாக, மாதிரி பொருளாதார மையம் ஒன்றை நிறுவுவது பற்றி சங்கம் ஆலோசிக்கிறது. குறிப்பாக இயற்கை வழிமுறைகளுடன் கூடிய, இயற்கையோடு ஒன்றி வாழத்தக்க மாதிரி ஒன்றை வடிவைக்க முயல்கிறோம்.

இம்மாதிரி காரைநகரில் எப்படி, எந்த இடத்தில் அமைக்கலாம் என உங்களின் பரிந்துரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அடுத்த கட்டமாக உரிய துறைசார் வல்லுனர்களுடன் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இதற்கான ஆலோசனைகள் பிரித்தானியா வாழ் காரைநகர் மக்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது. எமது காரை சங்கமம் 2022 இல், ஆலோசணை பெட்டி வைக்கப்பட்டிருக்கும். எமது விளையாட்டு நிகழ்விற்கு வருவோர், தங்கள் பரிந்துரைகளை அன்றைய தினம், எழுதி குறிப்பிட்ட பெட்டியில் போடலாம்.

 


மேற்கூறிய செயல்திட்டங்கள் சிறந்ததாக இருப்பினும், அவற்றை செய்துமுடிக்க நிதி எங்கிருந்து கிடைக்க போகிறது எனும் கேள்வி இங்கே தவிர்க்க முடியாதது. நதி மூலம்தான் கேட்க கூடாது, நிதிமூலம் பற்றி நிச்சயமாக கேட்கலாம்.

எமது சங்கம் எப்போதும் பிரித்தானியா வாழ் காரைமக்களின் உறுதுணையோடே அன்றும், இன்றும், என்றும் இருக்க போகிறது. பிரித்தானியா வாழ் காரைமக்களின் உதவி எமக்கிருக்க பயமேன். அவர்கள் ஏற்கெனவே பங்களிப்பு செய்த நிதி எம்மிடம் பத்திரமாக இருப்பதால், அந்த நிதியை வைத்து மேற்சொன்ன செயல்திட்டங்கள் துரித கதியில் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றன.

மேலும் மேலும் எமக்கு ஒத்துழைப்பை வழங்கி, எதிர்காலத்தில் மேலும் காரைநகருக்கான சிறந்த திட்டங்களை வழங்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.