காரைக் கதம்பம் 2018 

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான காரைக் கதம்பம் 2018 கடந்த சனிக்கிழமை 14ம் திகதி விளம்பி சித்திரைப் புத்தாண்டு நன்னாளில் இனிதே நிறைவேறியது.  நிகழ்வுகள் நிரலில் குறிப்பிட்டதுபோல் மாலை 05:00 மணிக்கு ஆரம்பமாகி  10:30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
                                 திருமதி.புவனேஸ்வரி தனபாலன் மற்றும் திருமதி செல்வகுமாரி ஜெயசிங்கம் மங்கள விளக்கேற்ற, தொடர்ந்து   திரு.பால்ராஜ் அவர்களின் தேவாரத்துடன் வழமையான சம்பிரதாய முறைப்படி நிகழ்வுகள் ஆரம்பமானது.
                                                                         விழாவிற்கு பிரதம அதிதியாக  திரு, திருமதி பேராசிரியர் ஆறுமுகம் நல்லைநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரான்சில் இருந்து வருகை தந்திருந்த திரு. அருளானந்தம் செல்வச்சந்திரன்( நேரு மாஸ்டர்) அவர்களும், அப்ரா நிறுவன (ABRA ) உரிமையாளர் திரு. திருமதி. துரைச்சாமி தயானந்தன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
                     வழமைபோல் பிரித்தானிய வாழ் காரை சிறார்கள், இளையோர்கள் தங்கள் கலை நிகழ்வுகள் மூலம் மேடையை அலங்கரித்தனர். இம்முறை கதம்பத்தில் முக்கிய நிகழ்வாக “எமது எதிர்காலம்”, எனும் நிகழ்வு சபையோரின்  பேராதரவையும், நன்மதிப்பையும் பெற்றிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் பல்கலைக்கழக கல்வியை முடித்து வெளிவந்த பிரித்தானிய வாழ் காரை பட்டதாரிகளை,  பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் அழைத்து கெளரவப்படுத்தியது. இதன் முக்கிய நோக்கமாக பிரித்தானிய வாழ் காரை இளையோரிடையே ஒரு பன்முகப்பட்ட  அறிமுகப்படுத்தலை உருவாக்குதல், அவர்களுக்கும் எமது காரை மண்ணில் வளர்ந்துவரும் இளையோரிடையேயும் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தல் மற்றும் பிரித்தானியாவில் இவர்களை தொடர்ந்துவரும் இளையோர்களின் பல்கலைக்கழக கல்வி, சமூகவியல் , மற்றும் வேலைவாய்ப்புகள் சார்ந்த  அறிவுரைகளை வழங்குதல் என்பனவற்றுக்காகும்.
            “வாழ்வது வனமானாலும் சேர்வது இனமாகட்டும்”
காணொளியுடன் மேலதிக செய்திகளையும், தலைவர் மற்றும் விருந்தினர்களின் உரையையும்   எதிர்பாருங்கள்.
நன்றி,
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்.