தவில்நாத(ஏழு)ஸ்வர இசை ஞான வேள்வி

 

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தினரால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருந்த இசைக் கச்சேரியுடன் கூடிய கலைஞர்கள் கௌரவிப்பு வைபவம் இனிதே 02-09-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

 

வைபவம் மாலை 06 :30 மணியளவில் CANNONS HIGH SCHOOL, SHALDON ROAD, HARROW, HA8 6AN  எனும் இடத்தில் அமைந்துள்ள பாடசாலை மண்டபத்தில் 250 க்கும் மேற்பட்ட இசை ரசனை உணர்வு கொண்ட மக்கள் மத்தியில் நடைபெற்றது.

 

தாயகத்தில் இருந்து வருகை தந்திருந்த எமது காரை மண்ணை சேர்ந்த நாதஸ்வர வித்துவான், ஞானநாத சொரூபி ,லயனநாத சொரூபி கணேஷன் பவப்பிரியன் , தவில் மேதை லயனஞான செல்வன் வித்துவான் கணேஷன் செந்தூரன்( இவர்கள் இருவரும் நாதஸ்வர வித்துவான் கலைமாமணி கைலாயகம்பர் கணேஷன் அவர்களின் புதல்வர்கள் ஆவார்கள்),மற்றும் யாழ் மண்ணை சேர்ந்த நாதஸ்வர வித்துவான் , நாதஸ்வர இளவரசன், கானபூபதி நாகதீபன் குமாரதாஸ், பரித்தித்துறை மண்ணை சேர்ந்த தவில் மேதை, தவில் சுடரொளி , வித்துவான் சதீஸ்குமார் சின்னராசா ஆகிய கலைஞர்களை வரவேற்று வரவேற்புரை வழங்கியிருந்தார் பிருத்தானிய காரை நலன் புரிச்சங்க தலைவர் திரு.ப.தவராஜா.

 

அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களை தங்கள் வாத்தியத்தின் மூலம் மெய்மறக்க வைத்தனர் கலைஞரகள். ”நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் , சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள்” என்ற அந்த நூற்றாண்டு கவிஞன் வரிகள் அன்று உயிர் பெற்றதுபோல் இருந்தது அரங்கத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களின் உணர்வலைகள்.

 

இறுதி நிகழ்வாக கலைஞர்கள் அனைவருக்கும் தங்க பதக்கமும் , பொன்னாடையும் போர்த்தி கையில் ரொக்கமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.