காரை மண்ணின் பிதாமகனுக்கோர் கண்ணீர் அஞ்சலி

புலம்பெயர் காரை அமைப்பின் ஆரம்ப நிறுவுனர்களில் ஒருவரான  கலாநிதி சபாபதி சபாரட்ணம் அவர்களின் மறைவு குறித்து பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலிப் பூக்கள்.

 

மேற்குலகிற்கான எம் புலம்பெயர் வாழ்வில், எமது தாய்க் கிராமமான காரைநகர் மண்ணின் வளர்ச்சி குறித்துச் சிந்தித்த மாமனிதரின் பேரிழப்பு இதுவாகும். 1980 களின் பின்னரான புலப்பெயர்வில் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்ட மூத்த சங்கமான இலண்டன் காரை நலன்புரிச் சங்கத்தை நிறுவியவர்களில் முக்கியமானவர் சபா அண்ணா. இச்சங்கம் 1990ஆம் ஆண்டு மேமாதம் தோற்றுவிக்கப்பட்டது. சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளாக அதன் செல்திசையை தோற்றுவித்தவர்.  அடுத்த வந்த 20 ஆண்டுகளாக அதன் செயலாளராக எம் சங்கத்தைச் செயற்படுத்திய பெருமகன். தன் இறுதிநாள்வரை காரைநகரின் வளர்ச்சிக்காக உள்ளன்போடு செயற்பட்டவர். காரைநலன்புரிச் சங்கத்தின் தோற்றம் முதல் கடந்த 23 ஆண்டுகளாக அதன் செயற்பாடுகள் அனைத்தையும் நெறிப்படுத்திய பெருமைக்குரியவர். அவரின் நேர்மையும் கண்ணியமும் அளப்பரிய சகிப்புத்தன்மையும் என்றென்றும் போற்றுதற்குரியவை. கால் நூற்றாணடை அண்மிக்கும் பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கத்தின் சாதனைகளாக கருதப்பட்டவை அனைத்தும் அவரின் எண்ணக் கருவூலத்தில் தோற்றம் பெற்றவை. அஞ்சலிகள் தெரிவிக்கும் இன்றைய நாளில் அவரின் செயற்திட்டங்களில் முக்கியமானவையாய் கருதப்படும் மூன்றினை இங்கு பதிவு செய்ய  விரும்புகிறோம்.

 

முதன்மையானதும் முக்கியமானதும் காரைநகருக்கான நன்னீர் வழங்கல் செயற்திட்டம். இலண்டன் காரை மக்களின் நிதிப் பங்களிப்போடு 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை செயற்படும் இத்திட்டம் சபா அண்ணாவின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் செயலாற்றுமையிலும் முன்னெடுக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு யூன் மாதம் நன்னீர் விநியோக கொள்கலன் இலண்டனிலிருந்து காரைநகருக்கு அனுப்பப்பட்டதன் மூலம் இச்செயற் திட்டம் ஒழுங்கு முறையாக நடத்தப்படுவதற்கான மூலகாரணியாய் இருந்தவர் சபா அண்ணா!

 

காரைநகரில் வாழும் மக்களின் சுகாதார நலன் குறித்த அத்தியாவசிய மருத்துவ செயற் திட்டங்களில் சபா அண்ணா ஓர் வழிகாட்டியாய் திகழ்ந்தவர். காரைநகர் எல்லைக்கு அப்பால் யாழ் போதனா வைத்தியசாலைக்கான இருதய நோய் மருத்துவ செயற்பாடுகளுக்கு எமது சங்கத்தின் சார்பாக  நிதி உதவிகளை வழங்குவதற்கு எம்மை ஊக்கிவித்த  புரவலர் சபா அண்ணா. காரைநகர் வைத்தியசாலையின் தேவைக்கேற்ப மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் தன் தனிப்பட்ட தொடர்புகளின் மூலம் செயற்படுத்தியவர்.

 

காரைநகர் வாழ் மாணவச் செல்வங்களின் மீதான சபா அண்ணாவின் அன்பும் ஆதரவும் அளப்பரிய ஒன்றாக இறுதிவரை இருந்து வந்துள்ளது. காரைநகரில் செயற்படும் அனைத்து பாடசாலைகளின் வளர்சியிலும் எவ்வித பாகுபாடுகளுமற்ற நலத் திட்டங்களை செயற்படுத்திய கண்ணியத்திக்குரியவர் சபா அண்ணா. சபா அண்ணா கல்வி கற்றதும் முதன்மைமிக்க காரைநகர் கல்விச்சாலையுமான காரை இந்துக்கல்லூரியை மையமாகக் கொண்ட அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்து வைத்தவர். அண்மையில் உருப்பெற்ற இந்த அறக்கட்டளை சபா அண்ணாவின் மாமனாரும், கல்லூரியின் சரித்திர முக்கியத்துவமுடைய அதிபரும், காரை மக்களின் அரசியல் தலைவராகவும் இருந்த அமரர் ஆ.தியாகராசாவின் பெயரால் ஆரம்பிக்கப்பட்டது.  ஆ.தியாகராசா அறிவியல் அறக்கட்டளை என்ற பெயரில் அமைந்த இத்திட்டமானது சபா அண்ணாவின் தனிப்பட்ட நிதியின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நலத்திட்டமாகும். இத்திட்டம் காரை மாணவர்களிற்கான புலமைப் பரிசில் நிதியை காலந்தோறும் வழங்கும் வகையில் நிரந்தர நிதி வைப்பீட்டைக் கொண்டதாகும். இற்றை வரையான  காரை கல்வி நலத்திட்டங்களில் அளப்பரியதோர் திட்டத்தை உருவாக்கிய பொன்மனத்தின் சொந்தக்காரர் எங்கள் சபா அண்ணா.

 

புலம்பெயர் நாடுகளில் உள்ள காரை நலன்புரி அமைப்புக்களில் அறக்கட்டளை அமைப்பாக பதிவாகிய அமைப்பு, பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கமாகும். 2007 ஆம் ஆண்டு எமது சங்கத்தை ஓர் அறக்கட்டளை ஆக்கிய பெருமைக்குரியவர் சபா அண்ணா. காரைநகரில் அமைந்துவரும் காரை அபிவிருத்திச் சபை நூலகத்தின் உருவாக்கத்திற்கு ஆரம்ப காலம் முதல் பேருதவிகளை நல்கியவர். அண்மையில் மிகுந்த பெறுமதி மிக்க 32 தொகுதிகள் அடங்கிய கலைக்களஞ்சியத்தை அவர் நூலகத்திற்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 

எழுத எழுத தொடரும் எல்லைகளுக்கு அப்பாலான அர்ப்பணிப்பாளன் எங்கள் சபா அண்ணா! தன் புலமை, கல்விப் பெருமை, சமூக மேன்நிலை ஆகிய அனைத்தையும் புறம்தள்ளி ஒர் அன்புமிக்க எளிய நண்பானாய் எம்மோடு ஊடாடிய ஓர் உயரிய மனிதனை இழந்து எம் சங்கம் வருந்துகிறது. அன்புடன் எம்மை அரவணைத்து வழிநடத்திய ஒரு மேய்ப்பனை நாம் இழந்திருக்கிறோம். ஒரு பிதா மகனை இழந்த பிள்ளைகளாக நாம் வருந்துகிறோம். விடைபெறும் சபா அண்ணாவை ‘பிதாமகன்’ என்றே போற்றி மனதிருத்தி, அன்னாரின் மறுவாழ்வின் ஆன்ம ஈடேற்றத்திற்காய் எல்லாம் வல்ல ஈழத்துச் சிதம்பர சௌந்தராம்பிகா சமேத சுந்தரேஸ்வர பெருமானை வேண்டி! அன்னாரின் பிரிவால் துயருறும் காரை மக்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

 

பிரித்தானியா வாழ் காரை மக்கள் சார்பாக,

 

பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்.